தமிழ்நாடு

உடல்நலக்குறைவால் மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன்

நிவேதா ஜெகராஜா

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த அவர், தற்போது பரோலில் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக, தற்போது அவர் சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு, அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை பரோல் நீட்டிப்பு செய்திருக்கிறது தமிழக அரசு. இந்நிலையில் பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று, ரத்த அழுத்தம், மூட்டு பிரச்சனை, கண் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக அவருக்கு தொடர்ந்து மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டு வருகிறது.

தொடர் சிகிச்சை கிடைக்காத காரணத்தினால் அவருக்கு நோய்களின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், அதனால் அவர் உடனடியாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் விழுப்புரம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவரிடம் பரிந்துரைத்துள்ளனர். பரிந்துரையின்படி, இன்று பேரறிவாளன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருடன் அவரின் தாயார் அற்புதம் அம்மாளும் உடனிருந்தார்.