தமிழ்நாடு

பேரறிவாளன் உள்ளிட்ட 67 சிறை கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம்...!

webteam

புழல் சிறை கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 67 பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு, வேலைக்காக யாரும் திண்டாடக்கூடாது என்பதற்காக கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம் பயற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இரண்டு வருடத்திற்கு முன்பு சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த சைலேந்திர பாபுவால் இந்த திட்டம் புழல் சிறையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி கைதிகளுக்கு ஓட்டுநர் பயிற்சி கொடுக்கப்பட்டது. அவ்வாறு வாகனம் ஓட்ட கற்றுக்கொண்ட பேரறிவாளன் உள்ளிட்ட 67 கைதிகளுக்கு தற்போது ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவர் தனது தந்தை சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு மாதம் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 8ஆம் தேதி பேரறிவாளனுக்கு தமிழக சிறைத்துறை பரோல் அனுமதி வழங்கியது. 

இதையடுத்து கடந்த 12ஆம் தேதியுடன் பரோல் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து தந்தையின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாக கூறி மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு பேரறிவாளன் விண்ணப்பித்திருந்தார். அதனால் அவருக்கு பரோலை நீட்டித்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.