விஜய், விஜயகாந்த் pt web
தமிழ்நாடு

பெரம்பலூர்|விஜயகாந்த் உரையாற்றிய இடத்தில் விஜய்., தொடர்கிறதா சென்டிமென்ட்?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பரப்புரை பயணத்தை மேற்கொண்டபோது, பெரம்பலூரில் முதன் முதலாக வானொலி திடலில் பேசிய நிலையில் அதே இடத்தில் பேசுகிறார் விஜய்.

PT WEB

தேமுதிக தலைவர் விஜயகாந்த் - தவெக தலைவர் விஜயை தொடர்புபடுத்தும் சென்டிமென்ட் இந்த முறையும் பேசப்பட்டு வருகிறது. பெரம்பலூரில் விஜய் பரப்புரை செய்ய உள்ள இடம், விஜயகாந்தின் அரசியல் பயணத்திலும் முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது. அது குறித்து காண்போம்...

மதுரையில் விஜய் நடத்திய 2ஆவது மாநில மாநாடு, விஜயகாந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டது. பின்னர் காவல் துறையின் அறிவுறுத்தலால் முன்கூட்டியே 21ஆம் தேதி நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் பேசிய விஜய், எம்ஜிஆர் போன்றே குணம் கொண்ட அண்ணன் விஜயகாந்த் என குறிப்பிட்டார். அவரும் மதுரை மண்ணைச் சேர்ந்தவர்தானே அவரை மறக்க முடியுமா எனவும் விஜய் பேசியிருந்தார்.

தொடர்ந்து, அந்த மாநாட்டில், வைரத்தை இழந்துவிட்டோம், தங்கத்தை தொலைக்கமாட்டோம் என விஜயகாந்த்தையும் விஜயையும் ஒப்பிட்டு பேனர் வைத்திருந்ததும் அப்போது வைரலானது. இந்நிலையில், மீண்டும் விஜயகாந்த் - விஜய் சென்டிமென்ட் பெரம்பலூரில் பேசப்பட்டு வருகிறது.

விஜய், தமது முதல் வார சனிக்கிழமை பரப்புரையை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக திருச்சியில் தவெக தொண்டர்களின் கூட்ட நெரிசல் காரணமாக 4 மணிநேர காலதாமத்திற்கு பிறகு பரப்புரையாற்றி முடித்திருக்கும் நிலையில், இரண்டாவதாக அரியலூரில் உரையாற்றுகிறார். தொடர்ந்து கடைசியாக இன்று பெரம்பலூரில் உரையாற்றவிருக்கிறார். இந்நிலையில், விஜயின் பெரம்பலூர் பரப்புரைக்காக பெரம்பலூரில் உள்ள காமராஜர் வளைவு பகுதியில் தவெகவினர் அனுமதி கேட்ட நிலையில், மேற்கு வானொலி திடலில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த வானொலி திடலுக்குக்கும் விஜயகாந்துக்கும் தொடர்பு உள்ளது.

விஜய்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பரப்புரை பயணத்தை மேற்கொண்டபோது, பெரம்பலூரில் முதன் முதலாக வானொலி திடலில்தான் பேசினார் என அவரது தொண்டர்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்று தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வுகள், விஜயகாந்தின் அரசியல் பயணத்தை விஜய் தொடர்வது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.