தமிழ்நாடு

ஒருபுறம் மருத்துவப்படிப்பு, மறுபுறம் கூலி வேலை : உதவிக்கு காத்திருக்கும் மாணவி

webteam

பெரம்பலூரில் பட்டியல் இன சமூகத்தின் முதல் மருத்துவ கல்லூரி மாணவி, கல்விக்கட்டணம் கட்டுவதற்காக கூலி வேலைக்கு செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த பிச்சைமணி என்ற கூலித்தொழிலாளியின் மகள் கனிமொழி. ஆஸ்பெட்டாஸ் கூரை வேய்ந்த 10க்கு 10 அளவே கொண்ட சிறியவீடு, கண்ணில் படும் பொருட்கள், பாத்திரங்கள் போன்றவை மாணவியின் ஏழ்மையை சொல்லாமலே சொல்லிவிடுகிறது. மாவட்டத்தின் பட்டியல் சமூகத்தில் இருந்து முதல்முறையாக மருத்துவக் கல்லூரியை எட்டிய மாணவி என்ற பெருமை இருந்தாலும், வறுமை அவர் வாசல் விட்டு விலகாமல் நிற்கிறது.

கல்விக்கட்டணம் கட்டுவதற்கு எந்தக் கையிருப்பும் இல்லாததால் மாணவியின் தந்தை பிச்சைமணி கூலிவேலைக்குச் சென்றும், தெரிந்த இடமெல்லாம் கடன் வாங்கியும் 3 ஆண்டுகளாக கட்டணம் கட்டிவந்துள்ளார். கூலிவேலைக்கு சென்ற இடத்தில் அவரது கால் உடைந்த நிலையில், கனிமொழி தற்போது கூலி வேலைக்கு செல்லத் தொடங்கியுள்ளார். மருத்துவபடிப்பில் இதுவரையிலான அனைத்து தேர்வுகளிலும், ஒரு அரியர் கூடவைக்காமல் படித்து வரும் கனிமொழி இறுதியாண்டு படிக்கும் இந்த நேரத்தில் வயலில் இறங்கி கூலி வேலைபார்த்து வருகிறார்.

எதிர்வரும் பிப்ரவரியில் வரும் இறுதித்தேர்வு எழுதிவிட்டால் மருத்துவர் என்ற நிலையில் இருக்கும் இந்த ஏழை மாணவி, தனது மருத்துவர் கனவை கடைத்தேற்ற யாரும் உதவுவார்களா? என்று காத்திருக்கிறார். வெள்ளை கோட், கழுத்தில் ஸ்டதெஸ்கோப் என மருத்துவக் கல்லூரிக்குள் செல்லும் மாணவர்கள் அனைவரும் வசதிவாய்ப்பு படைத்தவர்கள் அல்ல என்பதற்கு கனிமொழியே எடுத்துக்காட்டு. 

உதவ விரும்புவோர் தொடர்புகொள்ள : 95247 05879