தமிழ்நாடு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் கேட்டு மக்கள் போராட்டம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் கேட்டு மக்கள் போராட்டம்

webteam

மதுரை, திண்டுக்கல் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் கிராமத்திற்கு கடந்த ஒரு வருட காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ஊராட்சி மன்ற ஆணையாளர் பரமசிவத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ஒரு வாரத்திற்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கவுண்டன்பட்டி கிராமத்தி‌ல் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை என்று பொதுமக்கள் ‌குற்றம்சாட்டுகின்றனர். ‌அதிகாரிகள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தஞ்சை மாவட்டம் நாட்டரசன் கோட்டை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த 2 மாதங்களாக தண்ணீர் வழங்காத நிலையில் ‌பக்கத்து கிராமமான ஈச்சங்கோட்டைக்கு சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குடிநீருக்காக மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.