தீபாவளி பண்டிகைக்காக இன்று மட்டும் ஒரு லட்சத்து ஆயிரம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட 5 இடங்களில் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் ஒன்றரை லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில் இன்று ஒரு லட்சத்து ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
ஐந்து பேருந்து நிறுத்தங்களில் இருந்தும் 2 ஆயிரத்து 45 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. முன்பதிவு மூலம் 12 ஆயிரத்து 800 பேரும், முன்பதிவு செய்யாமல் 88 ஆயிரத்து 200 பேரும் பயணப்பட்டுள்ளனர். நள்ளிரவு வரை சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் இன்று புறப்பட்டுச் சென்றுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.