தமிழ்நாடு

’ஸ்மார்ட் சிட்டி’ திட்ட தஞ்சை பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கை இல்லாததால் மக்கள் அவதி

நிவேதா ஜெகராஜா

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் தற்போதுவரை பயணிகளுக்கான இருக்கைகள் செய்து தரப்படாமல் உள்ளது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள், தங்கள் பேருந்து வரும் வரை தரையில் அமரும் அவலம் தொடர்ந்துவருகிறது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் 39 பேருந்து நிறுத்தங்கள், 93 கடைகள், 4 பொதுக் கழிப்பறைகள், தலா ஒரு கண்காணிப்பு அறை, காவலர் அறை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வர் கடந்த டிச.8 -ம் தேதி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் ஒரு சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து தற்போது பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து நகர பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்களுக்கான பேருந்துகள் வரும் வரை காத்திருக்கின்றனர். அவர்கள் அமர இருக்கைகள் ஏதும் அமைக்கப்படவில்லை. பலர் தரையில் அமர்ந்தும், நின்று கொண்டே காத்திருந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பயணிகள் அமர இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே போல் பேருந்து நிலையத்தில் கடைகாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை காட்டிலும், ஆக்கிரமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “இருக்கைகள் அமைக்கக்கூடிய பணி நடைபெற்று வருகிறது. தேவையான இடங்களில் உடனடியாக அமைக்கப்படும்” என்றனர்.

- காதர் உசைன்