தமிழ்நாடு

ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய மக்கள்: கோயம்பேட்டில் கடும் போக்கவரத்து நெரிசல்

ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய மக்கள்: கோயம்பேட்டில் கடும் போக்கவரத்து நெரிசல்

kaleelrahman

பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்பியதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சார்பில் ஏற்கனவே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பேருந்துகளில் மட்டுமே 3 லட்சத்து 37 ஆயிரம் பேர் பயணம் செய்து இருக்கின்றனர். அதேபோல் பண்டிகை முடிந்தும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப நேற்று 17 முதல் வரும் 19 ஆம் தேதி வரை மொத்தமாக 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை சென்னைக்கு இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் நேற்று மட்டும் வழக்கமாக இயக்கும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 4,130 பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் நேற்று மாலை, இரவு நேரத்தில் சென்னைக்கு திரும்பியதால் இன்று காலை 5 மணி முதல் 7.30 வரை எம்.எம்.டி.ஏ முதல் கோயம்பேடு வரைபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெரும்பாலும் தென் மாவட்டம் மற்றும் கோவை, சேலம், மதுரை மண்டலத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் இன்று கோயம்பேடு வந்தனர். அதேபோல் ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் ஒரே நேரத்தில் வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் நெரிசலை சரி செய்தனர். தொடர்ந்து நாளை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.