கருப்பு கொடியை பறக்கவிட்ட பரந்தூர் மக்கள்
கருப்பு கொடியை பறக்கவிட்ட பரந்தூர் மக்கள் PT
தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: சுதந்திர தினத்தன்று கருப்பு கொடி பறக்கவிட்ட மக்கள்!

PT WEB

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராமங்களை உள்ளடக்கி ‘பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்’ அமைக்க மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள கிராம மக்கள் கடந்த 385 நாட்களாக பல்வேறு வித தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு

இந்நிலையில் நாட்டின் 77வது ஆண்டு சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏகனாபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் நடைபெற இருந்த கொடியேற்ற நிகழ்விற்கு மாணவ மாணவிகள் அழைக்கப்பட்டனர். அதற்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து, விமான நிலையம் கட்டுவதற்கான எதிர்ப்பை அக்கிராம பெற்றோர் இன்று பதிவுசெய்தனர்.

மேலும் ஏகனாபுரம் கிராமம் முழுவதும் தெருக்களில் கருப்பு கொடி தோரணம் கட்டியும், வீடுகள் தோறும் கருப்பு கொடியை ஏற்றி வைத்தும் அக்கிராம மக்கள் விமான நிலையம் அமைப்பதில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இத்துடன் ‘தொடர்ந்து ஆறு முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை’ எனக்கூறி இன்று நடந்த கிராம சபை கூட்டத்தை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி புறக்கணித்துனர். இதனால் அதிகாரிகள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு - சுதந்திர தின விழாவை புறக்கணித்த மக்கள்

மேலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பைக் காட்டும் வகையில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுனர்.