நட்டு பராமரித்த முந்திரி மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட இடம் இது. 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மரங்களை நம்பியே இந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். மலையடிகுப்பம், பெத்தான் குப்பம் உள்ளிட்ட 4 கிராமங்களில் 160 ஏக்கர் நிலத்தை கடலூர் மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்திய நிலையில், கடந்த ஜனவரி மாதம் அங்கிருந்த மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடிய நிலையில், நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்தான் இங்கு மரக்கன்று நடும் போராட்டம் நடத்தப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அகில இந்திய விவசாய சங்கத்தினர் அறிவித்த போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். தடையை மீறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். காவல் துறையை கண்டித்தும் கோட்டாட்சியரை கண்டித்தும் போராட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பி கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஒரு தரப்பினர் விவசாய நிலத்திற்குள் புகுந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். காவல்துறை அவர்களை கைது செய்ய முயற்சித்த போது காவல்துறைக்கும் பெண்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு மூதாட்டியயும் பெண் ஒருவரும் மயங்கி விழுந்தால் அவரை தூக்கிச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், விவசாய நிலத்தில் தொழிற்சாலை கொண்டுவரக்கூடாது எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோட்டாட்சியருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் அதிகரித்த நிலையில், போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். வெள்ளைகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போராட்டக்காரர்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் மண்டபத்திற்குள்ளும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.