தமிழ்நாடு

``அடிப்படை வசதி செய்துதராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்” சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

நிவேதா ஜெகராஜா
விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட சித்தலூர் பகுதியில் குடிநீர், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு அப்பகுதி பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மக்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டு சித்தலூர் பகுதியில் சுகாதாரமான குடிநீர், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, உள்ளிட்டவைகளை முறையாக அமைத்து தர வலியுறுத்தி விருத்தாசலம் பெண்ணாடம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் காவல்துறை, நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணப்படும் என அறிவித்தனர்.
இந்நிலையில் போராட்டத்தின்போது மேலும் சில தெரு விளக்குகள் திடீரென அகற்றப்பட்டது. இதனால் மீண்டும் தெருவிளக்கு உடனே அமைத்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. கோரிக்கைகளை ஏற்காவிட்டால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மக்கள் எச்சரித்தனர். இதுகுறித்து நகராட்சி அலுவலரிடம் கேட்டபோது, ``அனுமதி பெறாமல் புதிதாக அதிக அளவில் தெரு விளக்குகள் போடப்பட்டு உள்ளது. அதனாலேயே தேர்தல் விதிமீறலுக்காக தெருவிளக்குகள் அகற்றப்பட்டது” என தெரிவித்தனர் .