தமிழ்நாடு

சட்டவிரோதமாக வீட்டுக்குள் மதுவிற்பனை - நடவடிக்கைக் கோரி போராட்டம்

சட்டவிரோதமாக வீட்டுக்குள் மதுவிற்பனை - நடவடிக்கைக் கோரி போராட்டம்

rajakannan

சேலத்தில் சட்டவிரோதமாக வீட்டுக்குள் பெட்டிபெட்டியாக மறைத்துவைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் சூரமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வீடுகளில் சட்டவிரோதமாக மதுபானங்கள் பதுக்கிவைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதிகள் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து காவல்துறையிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், இன்று சேலம் பெங்களூரு சாலையில் 500க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். 

அப்போது அங்கு வந்த, மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சியாமளா உரிய நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்கள் அடையாளம் காட்டிய வீடுகளின் பூட்டை உடைத்த காவலர்கள் அங்கு பெட்டிபெ‌ட்டியாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

டாஸ்மாக் மதுபாட்டில்கள் தவிர, வெளிமாநில மதுபாட்டில்களையும் சட்டவிரோதமாக மறைத்துவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மருதாயி, பரிமளா மற்றும் மணி ஆகியோரை தேடி வருகின்றனர்.