தமிழ்நாடு

தூத்துக்குடியை அதிரவைக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்: 20,000 பேர் பங்கேற்பு

தூத்துக்குடியை அதிரவைக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்: 20,000 பேர் பங்கேற்பு

Rasus

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 20,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளதால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தூத்துக்குடியை அதிர வைத்துள்ளது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனிடையே வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க முயற்சியிலும் ஈடுபட்டது. இதற்கான அனுமதி கிடைக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்ட பணிகளையும் மேற்கொண்டது. எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மக்கள், ஆலையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என்பதை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள் அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் பூங்கா முன்பாகக் கூடி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிப்.,13 ஆம் தேதி பிற்பகல், கிராமத்தினர் உட்பட 231 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து விடுவிக்கப்பட்ட குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தங்களது கிராமத்தில் மரத்தடி நிழலில் போராட்டத்தை அமைதியான முறையில் மேற்கொண்டு வந்தனர். கடந்த 40 தினங்களாக ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் குமரெட்டியார்புர மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மரத்தடியின் கீழே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சுப.உதயகுமார் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைக்கு ஆலைக்கு எதிரான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துள்ளனர் தூத்துக்குடி மக்கள். ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தூத்துக்குடியில் இன்று முழுக்கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பொதுவாக முழுக்கடை அடைப்பு போராட்டம் என்பது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைதான் நடைபெறும். ஆனால் தூத்துக்குடியில் தற்போது வரை எந்தக் கடைகளும் திறக்கப்படவில்லை. மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் திரண்ட தூத்துக்குடி மக்கள் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பொதுக்கூட்டத்திற்கு இவர் தான் தலைமை என்றில்லை. அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமல் ஒட்டுமொத்த மக்களின் முயற்சியாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிகப்படியான பெண்கள், குழந்தைகள், என பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கை ஒன்று மட்டுமே. ‘ எங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்’ என்பது மட்டுமே. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் அறவே இல்லாமல் சென்றுவிடும். விவசாயம் பொய்த்துவிடும். எங்களுக்கு ஸ்டெலைட் ஆலை வேண்டவே வேண்டாம் என கடுமையான முழுக்கங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 4.30 மணியவில் தொடங்கி நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 20,000 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பேருந்துகள் மாற்று வழியில் இயக்கப்படுகின்றன.