தமிழ்நாடு

மதுரையில் 50 ஆண்டு கால ஆக்கிரமப்பை அகற்றிய காவல்துறை... வீதியில் போராடிய பொதுமக்கள்

மதுரையில் 50 ஆண்டு கால ஆக்கிரமப்பை அகற்றிய காவல்துறை... வீதியில் போராடிய பொதுமக்கள்

நிவேதா ஜெகராஜா

மதுரையில் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 581 கட்டிடங்களில், 500க்கும் மேற்பட்டவை காவல்துறையினர் பாதுகாப்புடன் இன்று அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு பகுதி என அறியாமல் அங்கு பல வருடங்களாக தங்கியுள்ள பொதுமக்கள், தங்களுக்கு இருப்பிட வசதிக்கு மாற்று ஏற்பாடு செய்து தருமாறு சாலையில் நின்றபடி காவல்துறையினரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிது.

மதுரை பிபி குளம் பகுதியில் 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயொன்று உள்ளது. இந்த கண்மாய் கரையை கடந்த 50 ஆண்டுகளாக ஆக்கிரமித்து 501 குடியிருப்புகள், 80 வணிக வளாக பயன்பாட்டு கட்டிடங்கள் என மொத்தம் 581 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குக்கான தீர்ப்பு கடந்த ஆண்டு வெளியானது. அந்தத் தீர்ப்பில், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற நீதிமன்றம் உதரவிட்டது. இதனை தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு கடந்த ஓராண்டாக மாநகராட்சி சார்பில் முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் கூட பெரும்பாலானோர் குடியிருப்புகளை காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ‘ஜூன் 13 (இன்று) காவல்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றும்’ என அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து, நேற்றைய தினம் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை காவல்துறையினர் தொடங்கினர்.

இதனால், அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. சூழலை கட்டுப்படுத்த, 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 6 பொக்லைன் இயந்திரம் மூலம் வணிக வளாக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்றது. ஆக்கிரமிப்பு அகற்றம் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கள் தொடர்ந்து மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தது வந்தனர். எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர்களை அமைதி காக்குமாறு அறிவுறுத்தினர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் தாங்கள் இத்தனை வருடங்களாக மின்சாரம், குடிநீர், வீட்டு வரி என அனைத்து வரிகளையும் கட்டி வந்த நிலையில் திடீரென குடியிருப்பை அகற்றுவதை தங்களால் ஏற்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். மேலும், “ஆக்கிரமிப்பு என தெரிந்தும், ஏன் அரசின் சலுகைகள் இத்தனை வருடங்களாக வழங்கப்பட்டது?” என கேள்வியும் எழுப்பினர். இந்த இடத்தில், மத்திய அரசின் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க 100 சதவீத மானியத்தில் BSUP திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுத்தது எப்படி என்கின்ற கேள்வியும் எழுகிறது.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் கூலி வேலை செய்து வரும் தாங்கள், என்றாவதொருநாள் அரசு பட்டா வழங்கிவிடும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும்; எளிமையான வீடுகளை கட்டிய தங்களுக்கு இந்த அகற்றம் பெரும் இழப்பாக இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக முதியவர்கள், சிறார்களை வைத்து கொண்டு வீடின்றி எங்கு செல்வது என செய்கை தெரியாது தவிப்பதாக கண்ணீர் மல்க கவலை தெரிவித்தனர் அப்பகுதி வாசிகள் சிலர்.

வீடின்றி தவிக்கும் தங்களுக்கு மாற்று ஏற்பாடாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்து தரவோ அல்லது அரசின் சார்பில் இலவச பட்டா வழங்கிடவோ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரிடம் கேட்டபோது, வீடு இல்லாதவர்களுக்கு உரிய ஆய்வு நடத்தி பட்டா அல்லது வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

- கணேஷ்குமார்