விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு பொதுமக்களை அச்சமடையச் செய்தது. இரவு 9.10 மணியளவில் உணரப்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவானது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையத்தை ஒட்டிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றியுள்ள கிருஷ்ணன் கோவில், செங்குளம், கம்மாபட்டி, மல்லி, இந்திரா நகர், பூவாணி, பாட்டக்குளம், வத்திராயிருப்பு பகுதிகளிலும், ராஜபாளையத்தை சுற்றியுள்ள மொட்டை மலை, தென்றல் நகர், மலையடிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் இரவு 9.10 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3ஆக பதிவானது.
நிலஅதிர்வால், வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்ததால் அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டுவெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டும் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதேபோன்று லேசான நில அதிர்வுஉணரப்பட்டது.
அதேபோல தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நாலாட்டின்புதூர், விஸ்வநாததாஸ் நகர், இந்திரா நகர், சுபா நகர், பாண்டவர்மங்கலம், சாய் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9.15 மணியளவில் சில வினாடிகள் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்ததால், மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், அதன் தாக்கம் இப்பகுதியில் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.