தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டிவருகிறார்கள். சில இடங்களில் பற்றாக்குறை இருப்பதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இன்றைய நிலவரம் என்ன? எத்தனை டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று பார்க்கலாம்.
சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள நான்கே முக்கால் லட்சத்துக்கும் அதிக மக்கள்தொகையில் இதுவரை 32 ஆயிரத்து 250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 3 நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 9090 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட 22 ஆயிரத்து 250 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆவடி மாநகராட்சிக்கு தினசரி வரவேண்டிய 5 ஆயிரம் தடுப்பூசிகள் இன்று வராததால் தடுப்பூசி போடவந்த மக்களுக்கு போட முடியாமல் ஆவடி மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக தடுப்பூசிகள் சரிவர கிடைக்காத நிலையில் அமைச்சர்களின் ஆய்வின்போது இதுபற்றி தெரிவித்ததையடுத்து, வெள்ளி முதல் தடுப்பூசிகள் வந்துள்ளன. ஆயினும் தினசரி 200க்கும் குறைவான தடுப்பூசிகள் மட்டுமே வருவதால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டோக்கன் அளித்து அதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சிறப்பு முகாம்களுக்கு ஆர்வத்துடன் வரும் 18 வயதுக்கு மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டத்திலும், மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும், திண்டுக்கல்லிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டினர். திண்டுக்கல் மாநகரப்பகுதியில் ஒரு நாளைக்கு 8 முதல் 10 முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 28 ஆம்தேதி வரை 84 லட்சத்து 50 ஆயிரத்து 115 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு இதுவரை 9 லட்சத்து 67 ஆயிரத்து 494 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 95 லட்சத்து 59 ஆயிரத்து 980 டோஸ்களை தமிழகம் வாங்கியதில் 88 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 12 சதவிகிதம் வீணாகியுள்ளது.
தமிழகத்தின் தடுப்பூசி கையிருப்பு சுமார் 10 லட்சம் டோசாக உள்ளது. அடுத்த மாதம் மத்திய அரசிடம் இருந்து 7 லட்சம் டோஸ்கள் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தமிழகம் தனியாக வாங்க முயற்சிக்கும் வகையில்13 லட்சம் டோஸ்கள் கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.