கே. பழனிசாமி - கனிமொழி Pt web
தமிழ்நாடு

”திமுக அரசை மக்கள் நம்பத் தயாராக இல்லை; கனிமொழி முற்றுகையே சாட்சி” - கே. பழனிசாமி

திமுக அரசின் சாக்குபோக்குகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதற்கு எம்.பி கனிமொழி அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Premkumar S

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17வயது பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி இரு தினங்களுக்கு அங்குள்ள காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் சடலமாக கிடந்தார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரி 2-வது நாளாக இன்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களையும், தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்த கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

கனிமொழி

இந்த சூழலில் தான் இன்று, திமுக எம்.பி கனிமொழி உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து, வீட்டில் இருந்து வெளியே வந்த அவரை, மூன்று நாட்களாகியும் குற்றவாளியை ஏன் கண்டுபிடிக்கவில்லை. சம்பவம் நடைபெற்ற மூன்று நாட்களுக்குப் பிறகு தாமதமாக வந்தது ஏன்? உள்ளிட்ட கேள்விகளுடன் அக்கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்பி கனிமொழி தெரிவித்தும், கிராம மக்கள் அவரை விடவில்லை. காவல்துறை பாதுகாப்புடன் அவரை அழைத்து செல்ல முயன்ற போது பொதுமக்கள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் கனிமொழி எம்பி. அமைச்சர் கீதாஜீவன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், திமுக அரசின் சாக்குபோக்குகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதற்கு எம்.பி கனிமொழி அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ”விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது. களத்தில் உறவினர்கள் - ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி!

எம்.பி கனிமொழி முற்றுகை

இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம். காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவிற்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா? இது இத்தோடு நிற்கப் போவது இல்லை. வரும் 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் களம் காண உள்ளது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. தூத்துக்குடி நிர்பயாவிற்கு உரிய நீதி கிடைப்பதை அதிமுக உறுதி செய்யும்! விரைவில் அமையப்போகும் அதிமுக அரசு, எப்படி மாண்புமிகு அம்மா அவர்கள் தாய் போல பெண்களைக் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண் போல் காக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.