தமிழ்நாடு

திருச்சி: சாலையில் சாக்கடை கழிவுநீர் - சாகசம் செய்யும் பொதுமக்கள்

திருச்சி: சாலையில் சாக்கடை கழிவுநீர் - சாகசம் செய்யும் பொதுமக்கள்

நிவேதா ஜெகராஜா

திருச்சியில், முக்கிய பகுதியொன்றில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் கசிவு காரணமாக, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் உள்ள கைப்பிடி சுவரை பிடித்து சர்க்கஸ் போல் சாகசம் செய்து சாலையை கடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

திருச்சி மாநகரில் தென்னூர் முக்கியமான மருத்துவமனைகளும்  பொதுமக்கள் அதிகமாக வரும் பகுதியாகவும் உள்ளது.தென்னூர் மேம்பாலம் பிரதான சாலையில் மாநகராட்சி கழிவுநீர் சாக்கடை பால பணிகளை தற்பொழுது மேற்கொண்டு வருகிறது. நேற்று முதல் கோவிட் இரண்டாம் அலை பரவல் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.

இதனையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் அதிகமானோர் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. சாலை ஒருபுறம் காவல்துறையினர் தடுப்பு அமைத்து மாற்று சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதித்துள்ளனர்.

இதையும் தாண்டி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலையைக் கடப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர் .குறிப்பாக தென்னூர் பகுதியிலிருக்கும் அரசு உதவிபெறும் சுப்பையா பள்ளியில் சாக்கடை கழிவு நீர் உள்ளே புகுந்து விட்டது .

மேலும் பொதுமக்கள் சாலையில் உள்ள கைப்பிடி சுவரை பிடித்து சர்க்கஸ் போல் சாகசம் செய்து சாலையை கடக்கின்றனர். மாநகராட்சி உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாலை முழுவதும் கழிவு நீர் நிரம்பி வழிந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. தற்பொழுது கோவிட் தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் சூழ்நிலையில் இந்த பணிகளால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சப்படுவதாக தெரிவித்துள்ளனர்.