தமிழ்நாடு

செங்கல்பட்டு: சீரமைக்கப்படாத, சேதம் அடைந்த சாலை - 10 ஆண்டுகளாக அவதியுறும் கிராம மக்கள்

நிவேதா ஜெகராஜா

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாத - சேதம் அடைந்த சாலை வசதியால் அப்பகுதியில் வசிக்கும் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதியுற்று வருகிறது. சேதமடைந்த சாலை இருப்பதால், கடந்த 5 வருடங்களாக பேருந்து வசதியும் தங்களுக்கு கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த கொண்டமங்களம் கிராமத்தில் சுமார் 5,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கருநிலம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டமங்களம் வழியாக அனுமந்தபுரம் செல்லக்கூடிய சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த பிரதான சாலை வழியாகவே மக்கள் அனைத்து தேவைகளுக்கும் சென்று வரவேண்டும். ஆனால் கடந்த 10ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால், சாலை முழுவதும் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழை பெய்தால் சாலையில் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கிவிடுகிறது. அதன்விளைவாக வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது அதிகளவில் விபத்துகள் ஏற்படுவதாகவும், மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் அவசர அவசிய பணிகளுக்கு அப்பகுதியில் செல்ல முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் இருந்து கொண்டமங்களம் வழியாக அனுமந்தபுரம் வரை பேருந்து இயக்கப்பட்டது. ஆனால் கொண்டமங்களம் கிராமத்தில் சாலை சேதம் அடைந்துள்ளதால் பேருந்து ஊருக்குள் வந்து செல்லாமல் வேறு வழியாக சென்று விடுகிறது. இதனால் பேருந்துக்காக 3 கிலோ மீட்டர் தூரம் சென்று மக்கள் பயணிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு உரிய சாலை வசதி செய்து தர வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனுவழங்கியும் எந்த பயணும் இல்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக கொண்டமங்களம் கிராமத்திற்க்கு சாலை வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

- உதயகுமார்.