தமிழ்நாடு

"தேவையற்ற ரயில் பயணங்களைத் தவிர்த்திடுங்கள்" - தெற்கு ரயில்வே மதுரை கோட்டம்

"தேவையற்ற ரயில் பயணங்களைத் தவிர்த்திடுங்கள்" - தெற்கு ரயில்வே மதுரை கோட்டம்

webteam

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ரயிலில் பாதுகாப்பாக பயணித்திட தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், கைகளைக் கழுவுதல் போன்றவற்றை ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

தேவையற்ற பயணங்களையும் கூட்டமாக பயணிப்பதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட கொரோனாவின் அறிகுறிகள் இருந்தால் ரயில் பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருப்போர், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்போர், தொற்று இருப்போர் ரயில் பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ரயில் பயணங்களின்போது உணவு, தண்ணீர், கிருமி நாசினி, சோப்பு ஆகியவற்றை சொந்தமாக கொண்டு செல்லவும், பிற மாநிலங்களிலிருந்து வரும் ரயில் பயணிகள் அரசு அறிவித்தபடி இ பாஸ், இ ரிஜிஸ்டிரேஷன், பரிசோதனை போன்றவற்றை பின்பற்றுமாறும் தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவுறுத்தியுள்ளது.