மின்சார ரயில் திடீர் ரத்தால் தாம்பரத்தில் குழப்பம்
மின்சார ரயில் திடீர் ரத்தால் தாம்பரத்தில் குழப்பம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட மின்சார ரயில் சேவைகள்; தாம்பரத்தில் நீடித்த குழப்பம்! என்ன நடந்தது?

webteam

தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணிகளை மேற்கொள்வதால், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு வழித்தட நிறுத்தம் மற்றும் மின்சார நிறுத்தம் அமல்படுத்தப்படும்.

பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதுதொடர்பாக மக்களுக்கு தெரிவிக்கும் நோக்கத்தில் என்றைக்கு இப்பணி நடைபெறுமோ, அதற்கு முதல் நாள் தெற்கு ரயில்வே பத்திரிகை செய்தி மட்டும் வெளியிடுகிறது.

rail

இதன்பேரில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ஆகிய மார்க்கங்களிலும், மறு மார்க்கங்களிலும் செல்லும் 44 ரயில்கள் அத்தினங்களில் ரத்து செய்யப்படுகின்றன. புறநகர் பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில் இன்று நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற்ற பராமரிப்பு பணிகளுக்காக காலை 10 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 44 மின்சார ரயில்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன.

சொன்னதுபோலவே பராமரிப்பு பணிகளுக்கு பிறகு ரயில் இயங்கும் சரியான நேரத்தை நடைமேடையில் உள்ள ஒலிபெருக்கிகளில் ரயில்வே தரப்பில் அறிவித்தனர். ஆனால் இன்றைய ரயில்கள் நிறுத்தம் குறித்த முன்னறிவிப்பு சென்றடையாத பயணிகள், ரயில் நிலையத்திற்கு வந்து சிரமப்பட்டனர். வயதானவர்களும் அலைச்சலுக்கு உள்ளாவதாகவும் நம்மிடையே தெரிவிக்கின்றனர்.

பயணச்சீட்டு எடுக்கும் இடத்திலோ அல்லது பயண நேரத்தில் ரயிலிலேயோ ‘நாளை ரயில்கள் இந்த நேரத்தில் இயங்காது’ என அறிவித்தால்... சிரமத்தையும், பணம் மற்றும் நேர விரயத்தையும் தவிர்க்க முடியும் என பயணிகள் கருதுகின்றனர்.

இந்த குழப்பத்தினால் இன்று ரயிலில் ஏற இயலாத பயணிகள், பேருந்துகளை நோக்கி பயணிகள் செல்லத்தொடங்கினர். இதனால் பேருந்துகளும் நிரம்பின.

இதில் குறிப்பாக ரயில் நிறுத்தப்பட்டிருந்த அதேநேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வந்த பேருந்துகள், தாம்பரத்தில் மக்களை இறக்கிவிட்டு சென்றன. அந்த மக்களும், ரயில் நிலைய மக்களும் ஒருசேர தாம்பரத்தில் குவிய நேரிட்டதால் கூட்டம் அலைமோதியது.

இது மக்களுக்கு பெரும் சிரமத்தையும் கொடுத்தது. அப்பகுதியில் மெட்ரோவும் இல்லாததால், விமான நிலைய மெட்ரோ (இதுவே தாம்பரத்திலிருந்து ஓரளவு பக்கம் என்பதால்) மக்கள் ஆட்டோக்கள், பேருந்துகள் மூலம் அங்கு படையெடுக்கத் தொடங்கினர். தொடர்ந்த இந்த சிக்கலால் வெகுநேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், குழப்பமும் எழுந்தன.

இடைப்பட்ட நேரத்தில் பிராட்வே மற்றும் கோயம்பேட்டுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன என்றபோதிலும், அவை போதிய அளவில் இல்லையென்று சமூகவலைதளங்கள் மூலமும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற நேரங்களுக்கு திட்டமிட்டு அரசு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

பத்திரிகை செய்திகளை தாண்டி சம்பந்தப்பட்ட ரயில்களிலும் முன்கூட்டியே அறிவிப்பது சிறந்ததாக இருக்கும் என பாதிக்கப்பட்ட பயணியொருவர் நம்மிடையே தெரிவித்தார்.