தமிழ்நாடு

“திமுக ஆட்சியில் மக்களுக்கான விடியல் கிடைக்கவில்லை”- ஓபிஎஸ் விமர்சனம்

“திமுக ஆட்சியில் மக்களுக்கான விடியல் கிடைக்கவில்லை”- ஓபிஎஸ் விமர்சனம்

kaleelrahman

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்கு கொடுத்து கொடுத்து பழக்கப்பட்டவர்கள். ஆனால், திமுகவினருக்கு மக்களிடம் இருந்து எடுத்துதான் பழக்கம் என்று திருப்பூரில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

திருப்பூரில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிமுக சார்பில் 407 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இவர்களை அறிமுகம் செய்து வைத்து, கட்சியினருக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் இன்று திருப்பூரில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அங்கு பேசிய ஓ.பன்னீர்செல்வம்...

"யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக, எந்த கொம்பனாலும் வெல்ல முடியாத எஃகு கோட்டையாக நம் இயக்கத்தை உருவாக்கி நம்மிடையே தந்துள்ளார்கள். ஜெயலலிதாவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி ஆட்சி பொறுப்பேற்று சிறு குண்டுமணி அளவு கூட குறையாத வகையில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.

கொரோனா காலத்தில் மக்களுக்கு சிறப்பான உதவியை வழங்கியது அதிமுக. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மக்களுக்கு கொடுத்து கொடுத்து பழக்கப்பட்டவர்கள். ஆனால், திமுகவினருக்கு மக்களிடம் இருந்து எடுத்து தான் பழக்கம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் நிலை இருந்தது. ஆனால் திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி விட்டனர்.

நீட் விவகாரம், மாதம் 1000 ருபாய், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும் எனக் கூறியது எவையும் நிறைவேறவில்லை. அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.2500-க்கு பதிலாக 5 ஆயிரம் ருபாய் கொடுக்கச் சொன்னார் ஸ்டாலின். ஆனால், அவர் தற்போது பணம் கொடுக்கவில்லை. தொகுப்பிற்கான பொருட்களும் வடமாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.

இவர்கள் கொடுக்கும் அரிசியை நம்மால் சாப்பிட முடியவில்லை என ஆடு மாடுகளுக்கு கொடுத்தால் அதுவும் நம்மை முறைக்கின்றது என விமர்சனம் செய்தார். தினமும் காலை விடிகின்றது, ஆனால், மக்களுக்கான விடியல் கிடைக்கவில்லை" என்றும் பேசினார்.