chennai
chennai file image
தமிழ்நாடு

“காசு வாங்குறீங்களே... லைட்கூட போட மாட்டிங்களா?” - சுங்கச்சாவடியால் நொந்துபோன வாகனஓட்டிகள்!

யுவபுருஷ்

சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், வர்த்தக நோக்கிலும், வாகன ஓட்டிகள் அசௌகரியமின்றி பயணிக்க வேண்டுமென்ற நோக்கிலும் சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு கொண்டுவரப்பட்டது வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை. இதில் வரதராஜபுரம், கோலப்பஞ்சேரி, பாலவேடு உள்ளிட்ட நான்கு பகுதிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த பகுதிகளில் டீ கடை, ஹோட்டல்கள், காயலான் கடை போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இப்படி பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் கார் முதல் லாரி வரை பலவகை வாகனங்களில் பயணிக்கும் பலரும், இண்டிகேட்டர் கூட போடாமல் வாகனத்தை நிறுத்திச் செல்கின்றனர். இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.

இது ஒருபுறம் என்றால், இரவு நேரங்களில் சுங்கச்சாவடி பகுதி மட்டும் மின்விளக்குளில் பளிச்சென தெரிகிறது; மற்ற இடங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மற்ற இடங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டும், அவை ஒளிராததால் சாலையில் போகவே வாகன ஓட்டிகள் அஞ்சுகின்றனர். இதனால் கொலை சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகள், தப்பித்து செல்ல ஏதுவாக சாலை வெறிச்சோடி காணப்படுகிறது என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். வழிப்பறிக் கொள்ளையர்கள் அதிகப்படியாக வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கைவரிசை காட்டுவதும் வழக்கமாக உள்ளது.

எனவே பொதுமக்களை விபத்து மற்றும் வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாத்திட உரிய மின்விளக்குகள் பராமரிப்பினை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். “காசு மட்டும் வாங்குறீங்களே.. ஒரு லைட் கூட போட மாட்டிங்களா?” என்றபடி அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக போடப்பட்ட சாலையே விபத்து, கொள்ளை களமாக மாறியிருக்கும் நிலையில், நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைகள் எழுகின்றன.