தமிழ்நாடு

ஆவடியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர் - பொதுமக்கள் அவதி

ஆவடியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர் - பொதுமக்கள் அவதி

Sinekadhara

ஆவடி மாநகராட்சியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் "நிவர்" புயலாக மாறியது. இதனையடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், பல இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனையடுத்து, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60அடி சாலை, வசந்தம் நகர், சரஸ்வதி நகர், ஸ்ரீசங்கரர் நகர், பெரியார் நகர், புது நகர், ஸ்ரீராம் நகர், பட்டாபிராம் பகுதியான குறிஞ்சி மாநகர், மேற்கு கோபாலபுரம், சித்தேரிக்கரை, திருமுல்லைவாயல் பகுதிகளான சோழம்பேடு சாலை, மணிகண்டபுரம், சோழன் நகர், ஸ்ரீசக்தி நகர், செல்வ விநாயகபுரம், அண்ணனூர் 60அடி சாலை, சிவசக்தி நகர் உள்ளிட்ட இடங்களில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியவில்லை. மேற்கண்ட பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து ஆறாக ஓடுகிறது. இதனால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், பருத்திப்பட்டு ஏரி நிரம்பி வழிகிறது. இதன், உபரிநீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்லமுடியாமல் ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உபரிநீர் ஆறாக ஓடுகிறது.

மேலும், உபரி நீர் கால்வாய் அயப்பாக்கம் ஏரிக்கு சென்றடையும் வரை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தண்ணீர் செல்லமுடியாமல் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. ஆவடி மாநகராட்சி , அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம்மூலம் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர். இருந்தபோதிலும், மழைநீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து கூறுகையில், ஆவடி மாநகராட்சியில், பருவ மழைக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், இங்குள்ள மழைநீர் செல்லும் கால்வாய், அடைப்பு ஏற்பட்டு கிடக்கிறது. இதனால் தற்போது மழைநீர் செல்ல முடியாமல் வீடுகளை சூழ்ந்து உள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நடக்கும் வடிகால் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் கிடக்கிறது. இதனால், தற்போது மழைநீர் செல்ல முடியாமல் வீடுகளை சூழ்ந்து உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.