தென்காசியில் தாழ்வு ரயில்வே மேம்பாலத்தில் தேங்கும் தண்ணீரால் மழை நேரம் முழுவதும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்டது செங்கானூர். இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் நெல்லை - தென்காசி இருப்பு பாதையில் இருந்த ரயில்வே கேட், 2017இல் அகற்றப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. 2018இல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த இந்த சுரங்கப்பாதையில் மழை காலங்களில் பெருமளவு தண்ணீரும், மற்ற நாட்களில் நீருற்று காரணமாக முழங்கால் அளவு தண்ணீரும் தேங்கி நிற்கிறது. இதனால் கிராம மக்கள், இவ்வழியாக கடந்து செல்லும்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக மாற்றுப்பாதை கேட்டு ரயில் மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தியும் பலனில்லாமல் கடந்த சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர். ஆனால் அப்போது அதிகாரிகள், இதனை சரிசெய்ய கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியதால் போராட்டத்தை கைவிட்டனர். தற்போது கடந்த சில தினங்களாக பெய்த மழையில் மீண்டும் தண்ணீர் தேங்க ஆரம்பித்து வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டதுடன், சில இடங்களில் மண் சரிந்து கற்கள் பெயர்ந்தும் விழுந்தன.
ஏற்கெனவே பேருந்து வசதி இல்லாத அந்தப் பகுதியில் தற்போது ஆட்டோவில் செல்ல வெறும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நபர் ஒருவருக்கு கட்டணமாக 80 ரூபாய் தரவேண்டிய நிலை உள்ளதால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மாணவ மாணவிகள் பள்ளிக்கு சைக்கிளில் செல்வதற்கும், மருத்துவமனைகளுக்கு முதியோர், கர்ப்பிணிகளைக்கூட கூட்டிச்செல்ல முடியாத அவல நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர். எனவே மாற்றுப்பாதை அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.