செய்தியாளர் சே.விவேகானந்தன்-தருமபுரி.
பென்னாகரம் அருகே மலை கிராமத்தில் சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாததால், பாம்பு கடித்த 13 வயது சிறுமி டோலி கட்டி எடுத்து வரும் வழியில் உயிரிழப்பு.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அலகட்டு மலை கிராமத்தில் 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் சாலை வசதி வேண்டி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அலகட்டு மலை கிராமத்தைச் சார்ந்த எட்டாம் வகுப்பு பயின்ற 13 வயது மாணவி கஸ்தூரியை விஷப்பாம்பு கடித்துள்ளது. இதை அறிந்த கிராம மக்கள் சரியான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், டோலி கட்டி வனப்பகுதியில் உள்ள சாலையின் வழியே மலை அடிவாரத்தில் உள்ள சீங்காடு கிராமத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.
ஆனால் வரும் வழியில் சிறுமி கஸ்தூரி உயிர் பிரிந்தது. தொடர்ந்து மீண்டும் டோலி சிறுமி உடலை மலை கிராமத்திற்கு எடுத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்று இந்த மலை கிராமங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.