பழசிராஜா குகை புதிய தலைமுறை
தமிழ்நாடு

நீலகிரி | சேரம்பாடியில் கண்டறியப்பட்ட போராளி மன்னர் ‘பழசிராஜா’-வின் குகை.. வியக்கவைக்கும் பின்னணி!

சேரம்பாடியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட பழசிராஜா மன்னரின் குகை இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. பழசிராஜா மன்னரின் 6ஆம் தலைமுறையை சேர்ந்தவர்கள் இந்த குகைக்கு நேரில் வந்து அவருக்கு மரியாதை செலுத்தி சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்துவைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: மகேஷ்வரன்

கேரளாவின் வடக்கு மாகாணமான கண்ணனூர் மாவட்டத்தில் உள்ள கூத்துபரம்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டயம் மற்றும் மலபார் பகுதியின் மன்னராக, 1753 ல் ஆட்சி புரிந்தவர் பழசி ராஜா. நீலகிரி மாவட்டத்தின் முதுமலை, நெலாக்கோட்டை, ஸ்ரீ மதுரை, சேரம்பாடி மற்றும் மசினகுடி இவற்றுடன் கண்ணனூர் மற்றும் வயநாடு மாவட்டத்தின் தலைச்சேரி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி கோட்டயம் மண்டலமாக இருந்தது.

ஆங்கிலேய அரசின் வரி வசூலுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன், ஆங்கில பிரிவினைவாத ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியதால், மக்கள் இவருக்கு ஆதரவு அளித்தனர். பிரிட்டிஷ் படைகள் இவரின் கோட்டயம் அரண்மனையை சுற்றி வளைத்த போது, அங்கிருந்து வயநாடு மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தார். 1799-ல் வயநாடு பகுதிகளை தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்.

தொடர்ந்து பழசிராஜா தனது வீரர்களுடன் வனங்களில் தங்கி போர் புரிந்தார். மேலும் குறிச்சியா பழங்குடியின மக்களை ஒன்றிணைத்து, ஆங்கிலேயருக்கு எதிராக போரில் பங்கேற்றார். அப்போது குறும்பா மற்றும் பனியர் பழங்குடியின மக்கள் ஆதரவு கொடுத்ததுடன், வீரர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்கும் இடங்களை தயார்படுத்தி கொடுத்தனர்.

பந்தலூர் அருகே கோட்டமலை மற்றும் நெலாக்கோட்டை பகுதிகளில் குகைகள் அமைத்து, அதில் தனது படைகளுடன் தங்கியிருந்து ஆங்கிலேயருக்கு எதிராக கொரில்லா போர் தொடுத்தவர் பழசி ராஜா. அதில் ஒரு குகை தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் செயல்படும் வெண்ட்வொர்த் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை அருகே, சிறிய குழியாக காணப்பட்ட பகுதியை சீரமைத்து பார்த்ததுடன், வரலாற்று பதிவுகளை ஆய்வு செய்ததில், அது பழசி ராஜாவின் குகை என்பது தெரிய வந்தது.

இந்த குகையினை பழசி ராஜாவின் கொள்ளுப்பேத்தி கொச்சு தம்புராட்டி சுபா வர்மா, அவரது கணவர் டாக்டர் கிஷோர் நேரில் பார்த்து, இதனை திறந்து வைத்து, பழசி ராஜாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். சுமார் 1 அடி உயரத்திற்கு இந்த குகை சுமார் 30 மீட்டர் தூரம் சென்றதும், பிரிந்து இரண்டு பாதைகளாக செல்கிறது. தற்போது குகையின் உள்பகுதியில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு, பார்வையாளர்கள் செல்லும் அளவிற்கு சீரமைக்கப்பட்டு உள்ளது.