தமிழ்நாடு

கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கிய தனியார் பள்ளி வேன் - காயமடைந்த குழந்தைகள்

webteam

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 8 பள்ளி குழந்தைகள் காயமடைந்த நிலையில், ஆறு குழந்தைகள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் IBEA என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் பள்ளிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளி வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது அதம்பை கிராமத்திலிருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்துபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் இருந்த சாலையை விட்டு விலகி வயலுக்குள் சென்று விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் இருந்த எட்டு குழந்தைகள் காயம் அடைந்த நிலையில், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் தலையில் பலத்த காயமடைந்த இரு குழந்தைகளை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் காயமடைந்த குழந்தைகளை பார்க்க மருத்துவமனைக்கு யாரும் வரவில்லை என்று கூறி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து உடனடியாக காவல்துறை அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து விபத்துக்கான காரணம் பள்ளி வேன் எப்சிக்கு சென்று விட்ட நிலையில் வேறு ஒரு தனியார் வேனை குழந்தைகளை அழைத்து வர பயன்படுத்தியதாகவும் அந்த வேன் சரியான கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.