செய்தியாளர்: L.M.ராஜா
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக்கோட்டை கிராமத்தில் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் - கலா தம்பதியின் மூன்றாவது மகள் காவியா (17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பில் படித்து வருகிறார். தற்போது தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், காவியாவின் அம்மா கலா இன்று அதிகாலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவி காவியாவிற்கு இன்று உயிரியல் தேர்வு நடைபெற உள்ளது. படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட காவியா தன் தாய் வீட்டில் இறந்துகிடக்கும் நிலையில், இன்று காலை உயிரியல் தேர்வு எழுதுவதற்கு ஊரணிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று தேர்வெழுதி வருகிறார். காவியா தேர்வெழுத செல்வதற்கு முன்பு தனது தாய் கலாவின் காலில் கதறி அழுதபடியே விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இதைப் பார்த்த அருகிலிருந்த கலாவின் உறவினர்கள் கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து காவியா தற்போது பள்ளியில் தேர்வெழுதி வருகிறார்.
இது குறித்து மாணவி காவியா அழுதபடியே கூறுகையில்... நான் ஒவ்வொரு முறையும் தேர்வெழுத செல்லும்போது என் அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவேன். அப்போது அவர்கள் எனக்கு திருநீறு பூசி நீ நன்றாக தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வார்கள். தேர்வு எழுதிவிட்டு வந்தபிறகு எப்படி நீ தேர்வு எழுதியிருக்கிறாய். படிப்பு முக்கியம், நன்றாக படிக்க வேண்டும் என்று கூறுவார்கள். இன்று எனது அம்மா இறந்து விட்டார்கள். எனக்கு படிப்பு முக்கியம் என்பதால் நான் இன்று தேர்வெழுத வந்துள்ளேன் என்று கண்ணில் கசிந்த நீரை துடைத்தபடியே கூறினார்.