தமிழ்நாடு

ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற விவகாரம் : பட்டு தீட்ஷிதர் பணி நீக்கம் 

webteam

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பட்டு தீட்ஷிதர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 11ஆம் தேதி சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு ஆலை அதிபர் ஒருவரது வீட்டு திருமண விழா வெகு ஆடம்பரமாய் நடந்தேறியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். தனியார் திருமணத்திற்காக தங்கக் கோபுரம் மீதேற அனுமதியளித்தது யார் என கேள்வி எழுப்புகின்றனர் இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர். 

திருமணத்திற்கு வந்தவர்கள் ஆயிரங்கால் மண்டபம் வரை காலணி அணிந்து சென்றிருப்பது பக்தர்களை கொதிப்படைய செய்துள்ளது. இதற்கு சிதம்பரம் கோயில் தீட்ஷிதர் முறையாக விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் வலியுறுத்தினர். 

இதைத்தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் திருமணம் நடைபெற்றதில் எந்த உள்நோக்கமும், நிர்பந்தமும் இல்லை என கோயில் நிர்வாகி பட்டு தீட்சிதர் புதிய தலைமுறைக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில், பட்டு தீட்ஷிதர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.