தமிழ்நாடு

“நோயாளிகள் படுக்கை வசதியில்லாமல் தவிப்பதாக கூறுகிறார்கள்” - வானதி ஸ்ரீனிவாசன் ட்வீட்..

“நோயாளிகள் படுக்கை வசதியில்லாமல் தவிப்பதாக கூறுகிறார்கள்” - வானதி ஸ்ரீனிவாசன் ட்வீட்..

PT

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கை வசதிகள் இல்லாமல் தவிப்பதாக அவர்களது உறவினர்கள் கூறுகிறார்கள் என்று பாஜகவின் தமிழக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தன்னுடைய ட்விட்டரில் கூறியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 1875 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது. குறிப்பாக சென்னையில் 1407 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் மீண்டும் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சென்னையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், பாதிக்கப்படும் நபர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்த அரசானது முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநில பாஜக பொது செயலர் வானதி ஸ்ரீநிவாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், திரு.முருகன்(53) என்பவர் அனுமதிக்கப்பட்டுள்ளர். அவருக்கு நாடித்துடிப்பு குறைந்து வரும் நிலையில்,படுக்கை வசதி இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதே போல் நிறைய நோயாளிகள் அங்கிருப்பதாக கூறுகின்றனர். ஆகவே தயவுசெய்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ரேடியாலாஜி துறையின் மூத்த அதிகாரி ஆனந்த் குமார், “அவர் பாதுகாப்பாக இருக்கிறார். மூன்றாவது கட்டடத்தின் 7வது மாடியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான் அவரிடம் பேசினேன். அவருக்கு நாளை ஸ்கேன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தேவையானவற்றை செய்து கவனித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.