தமிழ்நாடு

“பார்க்கிங்கில் நிறுத்திய வண்டிகளை தயவு செய்து எடுத்துட்டு போங்க” - சென்னை மெட்ரோ

webteam

சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களை தயவுசெய்து இன்று மாலைக்குள் எடுத்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. எனவே பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தியாவை பொருத்தவரை வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பெரிய கடைகள் உள்ளிட்டவைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளின் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பல்வேறு மாவட்டங்களையும் முடக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அந்தவகையில், தமிழகத்தை பொருத்தவரை சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் அனைத்து புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்கள் மார்ச் 31-ஆம் தேதிவரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களை இன்று மாலைக்குள் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மெட்ரோ நிலைய மேலாளர்கள் இன்று மட்டுமே பணியில் இருப்பார்கள். எனவே சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களை இன்று மாலைக்குள் எடுத்துக்கொள்ளுங்கள்.” என அறிவுறுத்தியுள்ளது.