விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பெட்டிகளின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கொண்டிருந்த பயணிகள் ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன.
விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5:25 மணிக்கு புறப்பட்ட MEMU ரயில், ஒரு வளைவைக் கடக்கும் போது, அதன் சில பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. MEMU ரயில் என்பது 38 கிலோமீட்டர் தூரம் செல்லும் ரயில் ஆகும். இருப்பினும், லோகோ பைலட் விரைந்து செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், ரயிலிருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்றும் ரயில்வே ஊழியர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், தற்போது விபத்து குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில்தான், விபத்துக்கான காரணம் தெரியவரும்.
ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், தடம் புரண்ட ரயிலின் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.