இபிஎஸ், சண்முகம், வேலுமணி Pt web
தமிழ்நாடு

இரண்டாக உடைந்த அதிமுக.. அதிரடி காட்டும் இபிஎஸ்.. கட்சிப் பதவிகள் பறிப்பு!

பொதுக்குழுவைக் கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தபிறகு, பதவிகளைப் பறிப்பது விதிகளுக்கு முரணானது என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Prakash J

அதிமுக இருதரப்பாக உடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் பொறுப்புகளைப் பறித்துள்ளார். இது, அதிமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் 144 வாக்குகளுடன் வெற்றி பெற்று ஆட்சி தொடரும் நிலை உருவானது. எஸ்.பி. வேலுமணி தரப்பு 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்ததால், அதிமுகவில் EPS மற்றும் SPV என இரு அணிகள் மோதல் தீவிரமடைந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இதையடுத்து, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 26 பேரின் கட்சி பதவிகளை பறித்த அக்கட்சி பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, 17 மாவட்டச் செயலர்களை நியமித்துள்ளார். குறிப்பாக, அதிமுக துணைப் பொதுச்செயலர் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலர் பதவிகளிலிருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கப்பட்டுள்ளார். அதிமுக தலைமை நிலைய செயலர் மற்றும் கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலர் பொறுப்புகளிலிருந்து வேலுமணி நீக்கப்பட்டுள்ளர்.

அதேபோல், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், தங்கமணி, விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், பென்ஜமின், உடுமலை ராதாகிருஷ்ணன், ஜக்கையன், இசக்கி சுப்பையா ஆகியோரது அமைப்புச் செயலர் பதவிகளும், மாவட்டச் செயலர் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், அருண்மொழி தேவன் உள்ளிட்டோரின் பதவிகளையும், எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வகித்த விழுப்புரம் மாவட்டச் செயலர் பொறுப்பு பசுபதிக்கும், எஸ்.பி.வேலுமணி வகித்த கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலர் பொறுப்பு வேலுசாமிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சி.வி.சண்முகம்

அதேபோல், நாமக்கல் மாவட்டச் செயலராக பாஸ்கர், திருவாரூர் மாவட்டச் செயலராக மூர்த்தி என்ற தஷ்ணாமூர்த்தி, திருப்பத்தூர் மாவட்டச் செயலராக பசுபதி, திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலராக ராமசுப்பிரமணியன் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அதேநேரத்தில், தங்களது கட்சி பதவிகளை பறிக்க அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமில்லை என அக்கட்சியின் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். பொதுக்குழுவைக் கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தபிறகு, பதவிகளைப் பறிப்பது விதிகளுக்கு முரணானது என அவர் தெரிவித்துள்ளார்.