கரூர் அரசு மருத்துவமனை pt web
தமிழ்நாடு

கரூர் கூட்டநெரிசல் பலி எண்ணிக்கை.. தலைவர்கள், நடிகர்கள் இரங்கல்!

கரூர் சம்பவத்திற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Prakash J

கரூர் சம்பவத்திற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய் இன்று மாலை கரூரில் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், அவரைக் காண்பதற்காக ஆரம்பம் முதலே தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அதில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து பரப்புரை முடிந்து கூட்டம் கலைந்த நிலையில் மேலும் பலர் மயக்கமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பல பேரில், 8 குழந்தைகள், 17 பெண்கள், 11 ஆண்கள் என 36 பேர் உயிரிழந்திருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இது மேலும் உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கப்படும் நிலையில், தமிழக அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

திரெளபதி முர்மு

இந்த நிலையில், கரூர் சம்பவத்திற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, “கரூரில் கூட்ட நெரிசலில் பலர் இறந்த துயரச் செய்தி அறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தோர் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”எனப் பதிவிட்டிருக்கிறார்.

நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இறந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்பது மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாண்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ”உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இச்சம்பவம் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு மிகப் பெரிய பாடமாக இருக்கிறது. மாநில அரசு உடனடியாக விசாரணை செய்து, பாதுகாப்பு குறைபாடுகள் எங்கே நடந்தன என்பதைக் கண்டறிந்து இத்தகைய துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்கு யார் காரணமோ அவர்கள் முழு பொறுப்பேற்கவேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை

நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், “நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்”எனப் பதிவிட்டுள்ளார்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், “இன்று கரூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்த அனைவரும் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பாரிவேந்தர்

நடிகர் ரஜினிகாந்த், “கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்”எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், "கரூரில் கூட்டநெரிசலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு யார் எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. இன்னும் சிகிச்சையில் இருக்கும் 58 பேரும் விரைந்து குணமடைய அனைவரும் வேண்டிக் கொள்வோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், “கோரக் காட்சிகள் கதிகலங்க வைக்கிறது; யாருக்கு ஆறுதல் சொல்வது, எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.