Pollachi Jayaraman
Pollachi Jayaraman pt desk
தமிழ்நாடு

இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியினர் கூட்டணிக்கு வரலாம் - பொள்ளாச்சி ஜெயராமன்

webteam

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், முன்னாள் துணை சபாநாயகரும் திருப்பூர் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " சென்னிமலை பகுதியில் நிகழ்ந்த இருவேறு கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது மர்மமாக உள்ளது. சென்னிமலை பகுதியில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில், திமுக ஆட்சியில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் இருக்கின்றனர்.

admk vs bjp

போலீஸ் முற்றிலும் செயல் இழந்துவிட்டது. போலீஸ் துறைக்கான அமைச்சர் கையாலாகாதவராக இருக்கிறார். இதேநிலை நீடித்தால், வெளியூர் வியாபாரிகள் சென்னிமலை வர பயப்படுவர். இதில், அரசு தீவிர கவனம் செலுத்தி மக்களின் அச்சத்தை நீக்கவேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெறும்.

தமிழக மக்களின் ஜீவாதார உரிமையாக காவிரி நீர் உள்ளது. காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமை. தமிழக முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸூடன் நல்ல உறவில் உள்ளதால் காங்கிரஸ் கட்சி தலைமையுடன் பேசி காவிரி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும். இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் திமுக, சோனியா காந்தி, கார்கேவிடம் செல்போனில் பேசி பெற்றுத் தரலாம். காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர அதிமுக ஜனநாயக முறையில் போராடும். இது எங்களின் கடமை; அதை செய்வோம்.

cm stalin

பாஜகவுடன் கூட்டணி முரண்பாடு என்பதால் நாங்கள் வெளியேறினோம். அதுபோல ஸ்டாலின், கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று சொல்லலாமே? கூட்டணி முறிவு குறிக்கு பொதுச் செயலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். எங்கு எதைப்பற்றி பேச வேண்டுமோ? அங்கு பேசி கூட்டணி முறிவு தொடர்பாக அறிவித்துவிட்டனர். கூட்டணி முறிவு குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை. கூட்டணி முறிவு குறித்து முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் பேசியது குறித்து எனக்குத் தெரியாது.

அதிமுக வரும் தேர்தலில் அமைக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். இனிவரும் தேர்தலில் தன்னிகரற்ற வெற்றி பெறும். பாஜக, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்ற சாதாரண தலைவர்களுடன் மாபெரும் தலைவர் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டுக்கொள்ள விரும்பவில்லை. எடப்பாடி தலைமையில் விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமையும். கையாலாகாத திமுக ஆட்சி விரைவில் வீட்டிற்கு போகும். எடப்பாடி பழனிசாமியை கூட்டணியின் தலைவராகவும் முதல்வராகவும் ஏற்றுக்கொள்பவர்கள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள், வரலாம்" என்றார்.