தமிழ்நாடு

`அதிமுக மக்களவை தலைவர் ரவீந்திரநாத்' - நாடாளுமன்ற அமைச்சரின் அழைப்பால் சலசலப்பு!

webteam

ரவீந்திரநாத்தை அதிமுக தலைவர் எனக் குறிப்பிட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கடிதம் அனுப்பி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் மக்களவை தலைவர் என குறிபிட்டு ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜி20 மாநாடு குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் கொடுத்தார். அதற்கு பன்னீர் செல்வம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரவீந்திரநாத்தின் அதிமுக எம்பி அந்தஸ்தை ரத்து செய்யுமாறு மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு இபிஎஸ் அண்மையில் கடிதம் எழுதி இருந்தார்.

இதனிடையே பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்குமாறு ஓ.பி.ரவீந்திரநாத், மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில், “பழனிசாமி தன்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவர் கூட்டிய சிறப்பு பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அவரது கோரிக்கையையும், கடிதத்தையும் நிராகரிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

இரு கடிதங்களையும் ஓம் பிர்லா பரிசீலித்து வருவதாகவும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகு தனது முடிவை அறிவிப்பார் எனவும் அதிமுக வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரவீந்திரநாத்தை அதிமுக தலைவர் எனக் குறிப்பிட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கடிதம் அனுப்பி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.