மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுகவிலுள்ள மூத்த தலைவர்கள் பலரின் வாரிசுகள் விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. தொகுதி உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க, திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதவிர, திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிரானந்தன் விருப்பமனு கொடுத்துள்ளார். பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி கோவை தொகுதிக்கும், மருமகன் கோபாலகிருஷ்ணன் பொள்ளாச்சி தொகுதிக்கும் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். திமுக தென்மண்டல முன்னாள் செயலாளர் தங்கப்பாண்டியன் மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன் தென் சென்னை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். முன்னாள் தருமபுரி எம்.பியான தாமரைச்செல்வனும் விருப்பமனு கொடுத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கடலூர் நகர செயலாளர் தண்டபாணி விருப்பமனு அளித்துள்ளார். மக்களவைத்தேர்தல் மட்டுமின்றி அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட சமீபத்தில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜியும், தஞ்சையில் போட்டியிட அஞ்சுகம் பூபதியும் விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர். இதற்கிடையே வடசென்னை தொகுதியில் திமுக தொழிற்சங்கம் சார்பில் போட்டியிட ராஜகாந்தம் வேட்புமனு தாக்கல் செய்தார்.