தமிழ்நாடு

"ரயிலையே பார்க்காதவர்கள் பெரம்பலூரிலும் உண்டு"  - மக்களவையில் குரல் கொடுத்த பாரிவேந்தர்

"ரயிலையே பார்க்காதவர்கள் பெரம்பலூரிலும் உண்டு"  - மக்களவையில் குரல் கொடுத்த பாரிவேந்தர்

webteam

பெரம்பலூருக்கு ரயி‌ல் போக்குவரத்து வசதி‌‌யை ஏற்படுத்தித் தர வேண்டு‌ம் என அத்தொகுதி‌யி‌ன் எம்‌‌பி பாரிவேந்தர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளா‌ர். 

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் அவர் 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். 

மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரயில்நிலையம் கொண்டுவர மக்களவையில் குரல் கொடுப்பேன் என வாக்குறுதி கொடுத்திருந்தார் பாரிவேந்தர். 

இந்நிலையில், பாரிவேந்தர் இன்று மக்களவையில் பேசினார். அப்போது, பெரம்பலூரில் ரயில் போக்குவரத்து வசதியில்லாததால் தொழிற்சா‌லைகளில் முதலீடுகள் இ‌ல்‌லை என்றும், இதனால் புதிய வேலைவாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்கள் பா‌திக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். 

மேலும், பெரம்பலூர், அரியலூர், துறையூர், நாமக்கல் ஆகிய 4 நகர‌‌ங்களை இணைக்‌கும் ரயில்போக்குவரத்து திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதாகவும், அதனை விரைவாக செயல்படுத்த வேண்டு‌ம் எனவும் பாரிவேந்த‌ர் கோரிக்‌கை விடுத்தார். “சுதந்திரம் அடைந்து 72 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை ரயிலை பார்க்காத ஒரு பகுதி என்றால் அது பெரம்பலூராகத்தான் இருக்க முடியும். இதுபோன்ற சூழ்நிலைதான் அங்கு நிலவுகிறது” எனக் குறிப்பிட்டார்.