தமிழ்நாடு

‘பட்டா கத்தி’ மாணவர்களை அடித்து உதைத்த பெற்றோர்கள்!

Rasus

அரசுப் பேருந்தில் பட்டா கத்திகளுடன் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை, பெற்றோர்களே காவல்நிலையத்தில் வைத்து அடித்து கண்டித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை வண்ணாரப்பேட்டை மின்ட் மேம்பாலம் அருகே பேருந்தில் பட்டா கத்திகளுடன் ரகளை செய்த 3 மாணவர்கள் காவல்துறையின் பிடியில் சிக்கினர். மூவரும் சிறார் என்பதால் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் பெற்றோர் முன்னிலையில் காவலர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறினர். அராஜக செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மூவரையும் அடித்து, உதைத்த பெற்றோர்கள், அவர்களை கண்டித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திவரும் காவல்துறையினர் மாணவர்கள் மீது எடுக்கப்பட‌ உள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

முன்னதாக, சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற இறைவணக்க கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களையும் வழங்கினார். மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டா கத்திகளுடன் பேருந்தில் பயணம் செய்ததால், ஒட்டுமொத்த கல்லூரி மாணவர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதாக கூறிய அவர், இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார். படிக்கும் வயதில் மாணவர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது என வலியுறுத்திய ஏ.கே. விஸ்வநாதன், எதிரிக்கும் அன்பு பாராட்டும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.