தமிழ்நாடு

“மகனுக்கு மனநலம் சரியில்லை; எங்களுக்கு வயதாகிவிட்டது” - கண்ணீருடன் உதவி கோரும் பெற்றோர்

“மகனுக்கு மனநலம் சரியில்லை; எங்களுக்கு வயதாகிவிட்டது” - கண்ணீருடன் உதவி கோரும் பெற்றோர்

webteam

மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மகனை பராமரித்து காப்பாற்ற நிதி உதவி வழங்க கோரி மாற்றுத் திறனாளி மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் கேவிஆர் நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகன் அசோக் பாபு(35) மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சந்திரசேகரன் மற்றும் ஜோதி தனது மகன் அசோக் பாபு உடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோதி, “எங்களது மகன் பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் நாங்கள் ஆசையாக அவனை வளர்த்து வருகிறோம். எங்களுக்கு 70 வயதுக்குமேல் ஆகிவிட்டது. இதுவரை யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்து விட்டோம். எனது மகன் சுயமாக எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் யாரும் வாடகைக்கு வீடு வழங்க மறுக்கின்றனர்.

மேலும் எங்களுக்கும் வயதாகிவிட்டதால் வேலைக்கு செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் எங்களின் மகனின் எதிர்காலத்தை நினைத்தால் எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் எங்களது மகனை பராமரித்து காப்பாற்ற நிதி உதவி வழங்க வேண்டும். மேலும் எங்களுக்கு குடியிருக்க ஒரு வீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.