தமிழ்நாடு

முறையாக பள்ளிக்கு வராத ஆசிரியர் - மாணவர்களின் பெற்றோர்கள் தர்ணாப் போராட்டம்

webteam

முறையாக பள்ளிக்கு ஆசிரியர் வருவதில்லை என மாணவர்களின் பெற்றோர் பள்ளியை பூட்டு போட்டு போராட்டம் நடத்தி உள்ளனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த மகேந்திரவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 82 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக புவியரசு, ஆசிரியராக சுகுணா செல்வகுமாரி ஆகிய இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

இந்நிலையில், இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது அவர்கள், “மாணவர்களின் சதவிகிதத்தை வைத்து பார்க்கும் போது இந்தப் பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். மேலும் தலைமை ஆசிரியராக பணியாற்றும் புவியரசு பள்ளிக்கு முறையாக வருவதில்லை” போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை கிராம மக்கள் முன்வைத்தனர். அத்துடன் பள்ளியை என்று பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாணாவரம் காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர்கள் உறுதியளித்தை தொடர்ந்து பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.