தமிழ்நாடு

”மகனே இறந்துவிட்டார்” - கல்விக்கடனை கேட்டு வழக்குத் தொடர்ந்த வங்கியால் பெற்றோர் அதிர்ச்சி!

PT WEB

அரியலூர் மாவட்டம் கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவர் தன்னுடைய பொறியியல் படிப்பிற்காக திருமழபாடி கனரா வங்கியில் ரூ.2 லட்சம் கல்விக்கடன் பெற்றுள்ளார். படிப்பு முடிந்து கடந்த ஆண்டு இன்டர்வியூக்காக கும்பகோணம் சென்று விட்டு ஊருக்கு வரும் பொழுது திருவையாறு அருகே சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதனையடுத்து அரவிந்த் இறந்தவுடன் இறப்பு சான்றிதழுடன் அவருடைய பெற்றோர்கள் வங்கியை அணுகி, வங்கி மேலாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வங்கி நிர்வாகமானது அரவிந்த் மீதும், அவர் தந்தை மீதும் வாங்கிய ரூ.2 லட்சம் கல்விக்கடனுடன் சேர்த்து வட்டியுடன் மொத்தமாக ரூ. 4 லட்சத்தை கட்டவேண்டும் என்று அரியலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசூர்யா, அரவிந்த் மற்றும் அவரது தந்தை பன்னீர் செல்வம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளார். இறந்த மகனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை கண்ட பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.