சிறார்களை வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னை பெருநகரில் சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவதால் விபத்துகள் அதிகமாவதால், அதற்குரிய விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்கு குறைவான சிறார்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கக்கூடாது என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 4 இன் படி 18 வயதுக்கு குறைவான ஒருவர் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறி சிறார்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.