பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி
பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி Twitter
தமிழ்நாடு

கீ போர்டு, சேர், நோட்டு புத்தகம் என பள்ளிக்கு சீர்வரிசையுடன் வந்த கிராம மக்கள்.. எங்கு தெரியுமா?

PT WEB

தூத்துக்குடி பண்டாரம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக நல்லாசிரியர் விருது பெற்ற நெல்சன் பொன்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தனது சொந்தச் செலவில் செய்து வருகிறார்.

கொரோனா காலத்தில் பள்ளிக்குத் தேவையான கட்டிட வசதியை தனது சொந்த பணத்தில் இருந்து கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஸ்மார்ட் கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்வி திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறார்.

இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளிக்கு தேவையான மற்றும் பள்ளி மாணவர்கள் கல்வி கற்க உதவக்கூடிய வகையில் சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான கம்ப்யூட்டர் கீ போர்டு, நோட்டு புத்தகங்கள், தரை விரிப்புகள், சேர், எழுதுபொருட்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான பொருட்களை சீர்வரிசையாக கிராமத்தில் ஊர்வலமாக கொண்டு வந்து தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் மற்றும் கல்வி அதிகாரிகள் முன்னிலையில் வழங்கினர். இந்த சீர்வரிசை நிகழ்ச்சியால் கிராமமே விழாக்கோலம் பூண்டது.