தமிழ்நாடு

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காவல்துறை தலைவர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

kaleelrahman

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி பாதுகாப்புக்கோரி கோவையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா செட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (21). மர வேலைப்பாடுகள் செய்யும் இவரும் ஓசூரை அடுத்த சாமனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நதியா (19) என்பவரும் சிறுவயது முதலே நண்பர்களாக பழகி வந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு 12ஆம் வகுப்பை நிறைவு செய்த நதியாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக மேல்படிப்பிற்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இன்று கோவை வந்தடைந்தனர்.

இதையடுத்து இருவரும் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் முன்னிலையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இருவரும் மாலையும் கழுத்துமாக கோவை பந்தயசாலையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.