துணை ராணுவப்படையினர்
துணை ராணுவப்படையினர் pt web
தமிழ்நாடு

தேர்தலுக்கு முன்பாகவே தமிழ்நாட்டிற்கு வரும் துணை ராணுவப்படையினர்; காரணம் என்ன?

PT WEB

மக்களவை தேர்தலோடு விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். மேலும், அரசு அதிகாரிகள் ஏற்கனவே பணியாற்றிய தொகுதிக்குள் வராதவாறு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் மாநில அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கவுள்ளது. இதனையொட்டி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் சென்னையில் கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையர் வழங்கிய அறிவுறுத்தல் குறித்த தகவல்களை சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

அதன்படி, மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 200 கம்பெனி ராணுவத்தினர் மார்ச் முதல் வாரம் முதல் தமிழகத்திற்கு வர உள்ளதாக சத்யபிரதா சாகு கூறியுள்ளார். இரண்டு கட்டமாக துணை ராணுவத்தினர் தமிழகம் வர இருக்கின்றனர். முதல் கட்டமாக தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவும், இரண்டாம் கட்டமாக தேர்தல் தேதி அறிவித்த பின்பும் தமிழகம் வரவுள்ளனர். இதன்மூலம், பதற்றமானதாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தலுக்கு முன்பாகவே துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிகள் தொடர்பாக சட்டப்பேரவை செயலாளரிடம் இருந்து எந்த ஆவணமும் வரவில்லை என்றும், தமிழகத்தில் ஜூன் மாதம் வரையிலான அரசு விடுமுறை நாட்கள் மற்றும் மதம் சார்ந்த பண்டிகைகள் குறித்த விவரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் தேதியை வார இறுதி நாட்களிலோ அல்லது தொடக்க நாட்களிலோ வைக்காமல் புதன்கிழமைவாக்கில் நடத்தலாம் என தலைமை தேர்தல் ஆணையரிடம் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே பணியாற்றிய தொகுதிக்குள் மீண்டும் வராதவாறு அரசு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் இடமாற்றம் செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் சிலர் மீண்டும் அதே மக்களவை தொகுதியில் பணியாற்றும் சூழல் உள்ளது. இதனை கருத்தில்கொண்டு தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு சத்ய பிரதா சாகு எழுதியுள்ள கடிதத்தில், இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், ஏற்கனவே பணியாற்றிய மக்களவை தொகுதியில் தேர்தல் பணியாற்றாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.