செய்தியாளர்: இ.முத்துப்பாண்டியன்
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாமிரபரணியின் மேற்கு கரையில் அமைந்திருக்கும் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சிவபெருமான், அகத்திய முனிவருக்கு மணக்கோலத்தில் காட்சி அருளிய தளமான இந்த திருக்கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாளுக்கும் சுவாமிக்கும் ஏராளமானோர் சீர்வரிசை பொருள்களோடு வருகை தந்து திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.