தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார் பன்னீர்செல்வம்

தமிழக பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார் பன்னீர்செல்வம்

webteam

தமிழக அரசின் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 2019 மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயராகி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைகளும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அதேபோல தேர்தலை எந்தவித பிரச்னையுமின்றி நடத்தி முடிக்க தேர்தல் ஆணையமும் வேலைகளை செய்து வருகிறது. பொதுவாக மக்களவைத் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்த அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.பி.க்களான தம்பிதுரை, வேணுகோபால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பான மனுக்களை அளித்துள்ளனர்.

இதனிடையே மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்தது. இதில், குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை, வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சம் என்பன உள்ளிட்ட பல்வேறுஅறிவிப்புகள் வெளியாகின. 

ஆனால் மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையாகவே உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுகுறித்து அதிமுக எம்.பி தம்பிதுரையும் பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

மக்களவைத் தேர்தல் வருவதால் மக்களைக் கவரும் வகையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். அப்போது, பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

கடந்த 2018இல் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், வருவாய்ப் பற்றாகுறை 17 ஆயிரத்து 490 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிதியாண்டில் கஜா புயல் நிவாரண‌ம், பொங்கலுக்கு பரிசுத்தொகை அளித்தது உள்ளிட்டவைகளில் அரசுக்கு சுமார் 4 ஆயிரம் கோடி செலவுகள் ஏற்பட்டுள்ளன. 

ஏற்கனவே 3.55 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்த கடன் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், ஜிஎஸ்டி வசூலிப்பில் இந்தியாவில், தமிழகம் 4ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் தமிழகத்தில் 34 ஆயிரத்து 589 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதா‌க நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 முதல் 10 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வசூல் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது‌.