தமிழ்நாடு

கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதிக்காத அதிகாரிகள்? - தீக்குளிக்க முயன்ற ஊராட்சி தலைவர்

கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதிக்காத அதிகாரிகள்? - தீக்குளிக்க முயன்ற ஊராட்சி தலைவர்

webteam

அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த ஊராட்சி தலைவரை அனுமதிக்காததால், அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அடிலம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் தீபா அன்பழகன்(திமுக). இவர் தன்னுடைய கிராமப் பஞ்சாயத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கவில்லை எனவும் இதனால் கிராமத்தில் வாக்களித்த மக்களுக்கு தெருவிளக்கு, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர இயலவில்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் கிராமங்களில் உள்ள பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் வாங்க நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் புகார் தெரிவிக்கிறார்.

இந்நிலையில், கிராம பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகளை செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க சென்றுள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அதிகாரிகள் அனுமதிக்காததால், திடீரென காரில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை, எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீபா தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதைப்பார்த்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் ஓடிவந்து மண்ணெண்ணை கேனை பிடுங்கி அவரை காப்பாற்றி, தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு தான் செல்வேன் என கூறி, சுமார் ஒரு மணி நேரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.